பண்டைய இந்தியாவின் கடற்வழிப் பயணங்கள் குறித்த தகவல்கள் புராண இதிஹாசங்களிலும் , பௌத்த  ஜாதகக் கதைகளிலும், காணக்கிடைக்கின்றன. இவற்றில் கலங்கள் குறித்த சில தகவல்களும், சென்ற இடங்கள் குறித்த சில விவரங்களும் உள்ளன. ஆயினும், தொல்லியல் சான்றுகளைக் கொண்டே நாம்  தகவல்களை நிறுவ முடியும். 

பண்டைய சிந்துசமவெளித் துறைமுகமான ‘லோத்தல்’ (Lothal) பகுதிக்கும் சுமேரியாவின் யூப்ரடீஸ் -டைக்ரீஸ் சமவெளிக்கும் இடையே ஆன வணிகத்தொடர்புகள் குறித்தான தொல்லியல் ஆதாரங்கள் பல நமக்கு கிடைக்கின்றன. இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பேரரசர் அலெக்சாண்டரின் படையில் ஒரு பிரிவினர் சிந்துப் பகுதியில் இருந்து கடல்  மார்க்கமாக ஹோர்முஸ் வளைகுடா சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. பவேரு, சுப்பரக புத்த ஜாதகக்கதைகளில் இந்தியாவிற்கும் பாபிலோன் மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கும் இடையே நிகழ்ந்த கடற் பயணங்கள் குறித்து பேசுகின்றன. கதாசரித சாகரம் இந்தியாவின் குஜராத் கடற்கரைப் பகுதிக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பயணக் குறிப்புகளைத் தருகிறது.

தமிழக மற்றும் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் பண்டைய துறைமுகங்கள் குறித்தும், வணிகம் குறித்தும் ஒரு தெளிவான  வரலாற்றுச் சித்திரத்தை கட்டமைக்க உதவுகின்றன. கொற்கை, பூம்புகார், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மருங்கூர்(இன்றைய அழகன்குளம்),ஆகியவை சங்க காலத்திற்கும் முன்பிருந்தே சிறந்த துறைமுகங்களாக திகழ்ந்ததற்கு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சாலியூர் என்று குறிப்பிடப்படுகின்ற துறைமுகம் தொண்டி ஆகலாம். அழகன்குளம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே ரோமுடன் வணிகத் தொடர்பு கொண்டது என்று ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. பூம்புகார் சோழ நாட்டின் துறைமுகமாக கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் இருந்திருக்கிறது. இந்த நகருக்கு அருகில் முன்பு இருந்த நீர்த்தடத்திற்கான சுவடுகள் மற்றும் படகுகளை நிறுத்தி வைக்க உதவும் மேடைகள் இருந்த  தடங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரிக்கமேடு அகழாய்வுகள் நம் கடற்பயணங்களையும் வணிகத்தொடர்புகளையும் அறிய உதவுகின்றன. 

கொற்கை கிழக்குக் கடற்கரையின் தென்கோடியில் அமைந்துள்ள பண்டைய துறைமுகமாகும். இங்கு நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் கி.மு.8 ஆம் நூற்றாண்டிலேயே இங்கு துறைமுகம் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொற்கை முத்துக்களுக்கான துறைமுகமாக அறியப்பட்டாலும் இங்கு பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் சீனத்துப் பட்டு,கற்பூரம் பிற நறுமணப் பொருட்கள் மறு- ஏற்றுமதி  செய்யப்பட்டன. மேற்குக் கடற்கரைப்  பகுதியில்,கேரளத்தின் முசிறி மிகவும் தொன்மையான துறைமுகமாகும். இது பண்டைய தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் முயிற்கோடு என்பதாகும். முசிறி மிகச் சிறந்த வணிக மையமாக பல நூற்றாண்டுகளுக்கு திகழ்ந்தது என்பதை சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வுகள் நிறுவுகின்றன. சமீப காலங்களில் இப்பகுதியின் பல வரலாற்றுச் சின்னங்கள் புனரமைக்கப்பட்டு, மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கும், மற்ற நாடுகளுக்கும் கடல் வழித்தொடர்பு கி.மு.1000க்கும் முன்பே  இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்று நூல்களாக கருதப்பெறும் மஹாவம்சம் மற்றும் ராஜவலிய ஆகியவற்றில் தமிழகத்துக்கும்  இலங்கைத்த்தீவுக்கும் இடையயேயான தொடர்பு குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. 1970 களில் மாலத்தீவு பகுதிகளில் தொல்லியல் ஆய்வினை நிகழ்த்திய அறிஞர் தோர் ஹெதல் என்பவர் அங்கு கிடைத்த தடயங்களைக்கொண்டு கி.மு. 1500களிலேயே இலங்கையிலிருந்தும் தமிழக கடற்கரை பகுதிகளிலிருந்தும் இங்கு மாலத்தீவிற்கு மக்கள் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும்,  சிந்து சமவெளி பகுதிக்கும் மாலத்தீவிற்கும் இடையே கடல்வழி வணிகம் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்றும் கருதுகிறார்.

பொது யுகம் முதலாம் நூற்றாண்டு முதல் மலேயக் கடற்கரைப்  பகுதிகளிலிருந்து வணிகக்கப்பல்கள் மேற்குப் பகுதியை நோக்கி வங்காள விரிகுடாவின் வழியாக பூமத்திய ரேகையின் நீர்த்தடம் கொண்டு மடகாஸ்கர் பகுதி கடற்பயணங்கள் மேற்கொண்டிருக்கின்றனர்  . தமிழகக் கடற்கரை பகுதிகளிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்தை தமிழர்கள் மேற்கொண்டனர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் கிழக்கு சீன கடல் பகுதி வழியாக அவர்கள் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான தடயங்கள் நமக்கு நிறைய கிடைத்துள்ளன.

சீனாவில் கிடைத்திருக்க கூடிய குறிப்புகளின் மூலம் பொது யுகம் முதலாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து வந்த ஒரு தூதுவர் குழு தமிழகத்தில் ஹாங் சே (காஞ்சிபுரமாக இருக்கலாம்) என்ற இடத்திற்கு வந்து அங்கே இருந்த அரசனை சந்தித்ததாக அறியலாம். தென்னிந்தியாவில் இருந்து மிக முக்கியமான பொருட்களாக  சந்தனம், முத்துக்கள் போன்றவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான குறிப்புகளும் கிடைக்கின்றன. 

சீனாவிலிருந்து பட்டும் தங்கமும் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கின்றன. சம்பா (வியட்நாம்), காம்போஜம்(ம்போடியா) மற்றும் சாவகம் (இந்தோனேஷியா) ஆகிய நாடுகளில்  பொது யுகத்தின் முதலாம் நூற்றாண்டில் இருந்தே புத்த மற்றும் ஹிந்து சமயத்தவர்கள் வசித்ததற்கானதடயங்கள்கிடைத்திருக்கின்றன.வாயு புராணத்தில் குறிப்பிட்டுள்ள பர்ஹின த்வீபா என்பது தற்போதுள்ள மலேய மற்றும் வியட்நாம் பகுதியின் இடையே இருக்கக்கூடிய போர்னியோ பகுதியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. இது  கடற்பயணிகள் ஓய்வெடுக்கும் இடமாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கி.பி.6 ஆம் -7 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் எழுச்சிக்குப் பின் மாமல்லபுரம் பகுதி பல்லவர்களின்  முக்கியமான  துறைமுகமானது. மாமல்லபுரத்தின் அருகில் உள்ள வயலூர் என்ற ஊரில் உள்ள கல்வெட்டொன்று அவ்வூரினை “பிலவாயிலூர்” என்று குறிப்பிடுகின்றது. அவ்வூரில் உள்ள ஆலயத்தின் இறைவனும்  திரும்பில வாயிலுடையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். பிற்காலத்தில் பிலவாயில் என்பது பிலவாயலூர் என மருவி வழங்கலாயிற்று. முதலாம் ராஜராஜன் காலத்தில் ஜனநாத நல்லூர் என்று வழங்கப்பட்டு, பின்னாளில் வயலூர் என்றும் பின்னர் பெயர் திரிந்து தற்பொழுது வயலூர் என்று அழைக்கப்படுகிறது. பிலவாயில் என்ற சொல் பிறிதோர் உலகத்திற்கு செல்லும் முகப்பு என்று பொருள் கொண்டது. கடல் கடந்து செல்ல வேண்டி கலங்கள் இங்கிருந்து புறப்பட்டிருக்கலாம்.

காஞ்சி பல்லவர் காலத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கல்வெட்டுக்களைக்  கொண்டு தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாக வணிகக்குழுக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வணிகம் செய்யச்  சென்றிருப்பதை அறிகிறோம். குறிப்பாக Takua Pa என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டானது அங்கே தமிழகத்தில் இருந்து சென்ற மணிக்ராமம் என்று அழைக்கப்படக்கூடிய வணிகக் குழுவினர் அங்கே ஏற்படுத்திய நீர்நிலையைப்  பற்றி பேசுகிறது. அந்த நீர்நிலைக்கு இரண்டாம் நரசிம்ம வர்மனின் பட்டப்  பெயரான அவனிநாரணம் என்று பெயர் சூட்டப்பட்டது. இது போன்ற பல கல்வெட்டுகள் மூலம் பல்லவர் காலத்தில் நிகழ்ந்த வணிகத் தொடர்புகள் நமக்குத்  தெரிய வருகின்றன.பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் (பொ.யு. 7 ஆம் நூற்றாண்டு)  நாகப்பட்டினத்தில் சீன வணிகர்களுக்காக ஓர் பௌத்த விஹாரம் அமைக்கப்பட்டது.

பல்லவர்களுக்குப் பின்னால் தஞ்சையை தலைநகராகக்  கொண்டு ஆண்ட சோழர்கள் பெரும் அளவிலே தங்களுடைய கடற்பயணங்களை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலான சோழர்களுடைய கடற் பயணங்கள் தெள்ளத்தெளிவாக நமக்கு பல்வேறு வரலாற்று சான்றுகளுடன் கிடைக்கப்  பெறுகின்றன. முதலாம் பராந்தகனுடைய காலத்திலேயே இலங்கைக்கு சோழர்கள் படையெடுத்து சென்றமை தெரியவருகிறது.

சோழர்களுடைய ஆட்சியின் கீழ் பொ.யு.பத்தாம் நூற்றாண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான வணிகத் தொடர்பானது பல்மடங்கு பெருகியது. இதன் காரணமாக பல்வேறு வணிகக் குழுக்கள் உருவாயின. அவற்றுள் முக்கியமானவையாக ஐந்நூற்றுவர், நானாதேசி, பதினெண்விஷயம்  என்று பெயர் கொண்ட வணிகக் குழுக்களினுடைய பெயர்கள் கல்வெட்டுக்களில் கிடைக்கின்றன. இவற்றில் ஐநூறுவர் என்று அழைக்கப்படக்கூடிய வணிகக் குழுவானது சமூகத்தில் உயர்ந்த நிலையை கொண்டிருந்த ஒரு குழுவாக அமைந்திருந்தது என்பதை அறியமுடிகிறது. நானாதேசி என்று அறியப்படும் வணிகக்குழுவானது  இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்ட ஒரு குழுவினரைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பதினெண்விஷயம் எனப்படுபவர்கள் பதினெட்டுப்  பகுதிகளில் இருந்து அல்லது பதினெட்டு நாடுகளில் இருந்து ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு வணிகம் செய்தவர்களாக இருக்கலாம் என்று அறிஞர்கள் யூகிக்கின்றனர். பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் இலக்கண நூலான நன்னூல் இந்த பதினெண்விஷயம் என்பதை பதினெட்டு நாடுகளாக அடையாள படுத்துகிறது. அவை சிங்களம்,சோனகம், சாவகம், சீனம், துளுவம். குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், கோசலம் மற்றும் தமிழகம்  என்று பட்டியலிடுகிறது.

மணிக்ராமத்தார் என்று அழைக்கப்பட்ட வணிகக் குழுவினர் ஒரு சிறிய அளவிலே செயல்பட்ட குழுவினராக இருப்பினும் முக்கியமான வணிகக்குழுவாக இருந்திருக்க வேண்டும். இன்றைக்கும் பூம்புகார் நகரை ஒட்டி மணிக்ராமம் என்ற  சிற்றூர் உள்ளது. இதை தவிர நான்குநாட்டார், அஞ்சுவண்ணம் போன்ற வணிகக் குழுக்கள் சோழர் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வணிகக்குழுக்களாக அறியப்படுகின்றன. 

சோழர்கள் தங்கள் கடற்படையின் வலிமையைப்  பெருக்கி பொ.யு.பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகவே இலங்கையின் மீது படையெடுத்து சென்றிருக்கிறார்கள். இதனை மஹாவம்சமும் பேசுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளும் பேசுகின்றன. தொடர்ச்சியாக சுந்தர சோழர் பின்னர் ராஜராஜன் அதற்கு பின் வந்த ராஜேந்திரன் காலத்தில் தொடர்ச்சியாக இலங்கையின் மீது சோழர்கள் படையெடுத்தனர். அதன் பின்னரும் பதினொன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் இறுதியிலும் சோழர்கள் இலங்கையின் மீது படையெடுத்திருக்கின்றனர். இந்த படையெடுப்பானது சோழர் கடற்கரையை ஒட்டியிருக்கக்கூடிய வங்காள விரிகுடாவின்(coromandel coast) கரையை  ஒட்டியே நிகழ்ந்திருக்க வேண்டும். சோழர் படைகள் யாழ்ப்பாணம் பகுதியை நோக்கி சென்றிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதைத்  தவிர ராஜராஜ சோழன் முந்நீர்ப் பழந்தீவு, பன்னீராயிரம் பகுதிகளைக் கைபற்றுகிறான். அது தற்போதைய மாலத்தீவுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாந்திமத்தீவு என்கிற தீவையும் சோழர்கள் கைப்பற்றினர். அது இன்றைய கோவா பகுதியில் அமைந்திருக்க கூடிய ஒரு பகுதியாக இருக்கலாமென்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

ராஜேந்திர சோழனின் 13ஆம் ஆட்சி ஆண்டின் கல்வெட்டில் மெய்க்கீர்த்தி பகுதியில் “அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி” பல்வேறு நிலபரப்புகளை கைப்பற்றியது பற்றிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. கடாரம், ஶ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், லங்கசோஹம், மாபப்பாளம், லிம்பங்கம், மலைப்பந்துர், தக்கோலம், மாதமலிங்கம், லாமுரி தேசம், மானக்கவாரம் என்று அந்த இடங்களை பட்டியலிடுகிறது. சோழர்களுடைய கடற்படை படையெடுப்பை குறித்து பல்வேறு யூகங்கள் ஆராய்ச்சியாளர்கள் இடையே நிலவுகிறது. இவை வணிகத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இருக்கலாம் என்றும் சாம்ராஜ்ய வலிமையை பெருக்குவதற்காக  இருக்கலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. இருப்பினும் பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதியில்  சோழர்கள் இலங்கையின் மீதான தங்களின் முற்றாதிக்கத்தை இழந்தனர். இலங்கையின் சில பகுதிகளே அவர்கள் ஆட்சிக்குட்பட்டு இருந்தன. 

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடற்பயணங்கள் மூலம் தன் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை கடல் கடந்த நாடுகளில் நிலை நிறுத்திய சோழப் பேரரசு, தன் கடல் ஆதிக்கத்தை 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முழுவதுமாக இழந்தது. 

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கடல் மற்றும் வானியல் அறிவும் கொண்ட  பல்வேறு மாலுமிகளின் குறிப்புகளும், நூல்களும், இங்கு நிலவி வந்த கப்பல் கட்டும் முறைகளையும், கடலில் கலங்களை செலுத்தும் முறைகளையும் நமக்கு தெரிவிக்கின்றன. அவை குறித்து வரும் கட்டுரைகளிலே காண்போம்.

(தொடரும்  )

அடிக்குறிப்புகள் 

Heritage of Indian Sea Navigation – Prof. B. Arunachalam 

A History of Indian Shipping – Dr. Radha Kumud Mookerji 

The Pallavas – G Jouveau Dubreuil

The Jatakas – Dr .Sarah Shaw