சங்க இலக்கியங்கள் தொடங்கி பலவற்றிலும் நாம் பண்டைய தமிழரின் கடற் பயணங்கள் குறித்து பல குறிப்புகளை நாம் காணலாம். இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் நாம் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி,  மணிமேகலை முதலிய இலக்கியங்களில் கடலில் செலுத்தப்பட்ட கலங்கள்  குறித்தும், அவற்றை இயக்கிய மாலுமிகள், காற்று, விண்மீன்கள், துறைமுகங்கள்  என்று பல குறிப்புகளை பார்த்தோம். 

காற்றின் துணைகொண்டு செலுத்தப்படும் கலங்கள்  குறித்து புறநானூறு பேசுகிறது. 

‘நளி கடல் இருங் குட்டத்து

வளி புடைத்த கலம் போல’ 

கப்பலை, தோணி என்ற சொல்லால் புறநானூறு குறிப்பிடுகிறது. 

“பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,

கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_

நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்” (299)

 

அகநானூறு, ஊதைக் காற்று கடற்கரையில் மணல்பரப்பை  சேர்ப்பது குறித்தும், கடற்கரையில் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் பேசுகிறது. 

”ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,

கோதை ஆயமொடு வண்டல் தைஇ,  

ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி” எனக்

கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்

கொற்றச் சோழர் குடந்தை வைத்த

நாடு தரு நிதியினும் செறிய

அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே” (60)

நற்றிணை, உறுதி வாய்ந்த மரப்பலகைகளால் கட்டப்பட்ட அம்பி, கடலில் விரைந்து செல்வதை குறிப்பிடுகிறது. உறுதியான நார்களைக் கொண்டு பின்னப்பட்ட வலைகளைக்  குறித்தும் பேசுகிறது. 

“வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை

இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,

நிறையப் பெய்த அம்பி, காழோர்

சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்

சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை” (74)

 

கடற்கரை அருகில், அலைகளால் தாக்கப்பட்டு, உடைந்த அம்பி குறித்தும் நாம் நற்றிணையில் காண்கிறோம்.

“ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென,

பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,

மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,”  (315) 

 

மதுரைக்காஞ்சி, பெருமழையிலும், கடுங்காற்றிலும் செலுத்தப்பட்ட பெரும் நாவாய்கள் சாலியூர் சென்றடைந்ததைக்  குறித்து பேசுகிறது. 

“வான் இயைந்த இரு முந்நீர்ப்

பேஎம் நிலைஇய இரும் பெளவத்து,

கொடும் புணரி விலங்கு போழ,

கடுங் காலொடு, கரை சேர,

நெடுங் கொடி மிசை, இதை எடுத்து,

இன் இசைய முரசம் முழங்க, 

பொன் மலிந்த விழுப் பண்டம்

நாடு ஆர நன்கு இழிதரும்,

ஆடு இயல் பெரு நாவாய்,

மழை முற்றிய மலை புரையத்

துறை முற்றிய துளங்கு இருக்கை,

தெண் கடல் குண்டு அகழி,

சீர் சான்ற உயர் நெல்லின்

ஊர் கொண்ட உயர் கொற்றவ!”

                                                                   (75-86)

 

கலங்களைச் செலுத்திய மீகாமன் (மாலுமி) குறித்தும், பெரிய பாய்மரங்களைக் கொண்டு செலுத்தப்படும் வங்கம் குறித்தும்  மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

“விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

நனந் தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார்,

புணர்ந்து, உடன் கொணர்ந்த புரவியொடு, அனைத்தும்,

வைகல்தோறும் வழிவழிச் சிறப்ப,

நெய்தல் சான்ற வளம் பல பயின்று, ஆங்கு”

“வால் இதை எடுத்த வளி தரு வங்கம்,

பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து

ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென

நனந் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக,

பெருங் கடல் குட்டத்துப் புலவுத் திரை ஓதம் 

இருங் கழி மருவிப் பாய, பெரிது எழுந்து”

                                                                       (536-541) 

 

புகார் நகரின் பெருமை பட்டினப்பாலை, புகார் நகர துறைமுகத்தை முழுமையாக படம் பிடித்துக் காட்டுகிறது. வெளிநாடுகளிலிருந்து கொணரப்பட்ட குதிரைகள் முதல் பல வாணிகப் பொருட்களைக் குறித்து பேசுகிறது. கலங்களின் பாய்மரங்களின் மீதுள்ள கொடிகள் குறித்து குறிப்பிடுகிறது.

“தீம்புகார்த் திரை மூன்றுறைத் 

துவங்கு நாவாய் துவன்றிருக்கை 

மிசைக்கூம்பின் அசைக் கொடியும் 

மீன்றடிந்து விடக்கறு”

                                            (173-175)

“பல்வே றுருவிற் பதாகை நீழற்

செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் 

செல்லா நல்லிசை யமரர் காப்பி 

னீரின் வந்த நிமிர்பரிப்  புரவியுங்  

காலின் வந்த கருங்கறி மூடையும் 

வடமலைப் பிறந்த  மணியும் பொன்னுங் 

குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் 

தென்கடல் முத்துங் குணகடற் றுகிருங் 

கங்கை வாரியுங் காவிரிப் பயனு

மீழத் துளவுங் காழகத் தாக்கமு 

மரியவும் பெரியவு நெரிய வீண்டி”

                                                                (183-191)

சூளாமணி, கப்பலின் உறுப்புகளான அணியம் ,அமரம் ஆகியவற்றை  குறிப்பிடுகிறது. தமிழக் காப்பியமான மணிமேகலை, கப்பல் கட்டும்  தச்சுக் கலைஞர்களான  கம்மியர்களை குறிப்பிடுகிறது. 

சங்க காலத்திற்குப் பின், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர் காலத்து கடற் பயணங்கள் குறித்தும், பல்லவர்களின் கடற்படைகுறித்தும், கல்வெட்டு, இலக்கியங்கள் மூலமாகவும் வெளிநாட்டவரின் குறிப்புகள் மூலமாகவும் பல தகவல்களைப்  பெற முடிகிறது. சங்க காலத்திற்கும் பல்லவ, சோழர் காலத்திற்கும் இடையே, கடல்வழிப் பயணங்கள், அது சார்ந்த அறிதல் முறையில் பெரும் முன்னேற்றம் தமிழகத்தில் நிகழ்ந்தது. கடலில் கலங்கள் செலுத்த வேண்டிய காலம், காற்றின் விசை அறிதல், வானிலை குறித்த புரிதல்கள் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. முறைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு வாணிகத் தொடர்புகள், கலாசார பண்பாட்டு பரிமாற்றங்கள் புதிய பரிமாணத்தை அடைந்தன. பொ.யு. ஆறாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையான கடல்சார்ந்த வளர்ச்சி மிக இன்றியமையாத காலகட்டமாகக் கருதப்படுகிறது. வாடா இந்தியாவின் பல பகுதிகளிலும் , தமிழகத்தின் கடல்சார் துறைகளின் வளர்ச்சி “சோழர்களின் கடல்சார் அறிவுத்திறன்” என்று அழைக்கப்பட்டது. 

உலக வரலாற்றின் மிகப் பழமையான படகு 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  கருதப்படும் Press Canoe, 1950களில் நெதர்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பொ.யு.மு 2500 ஐச் சேர்ந்த எகிப்திய மன்னன் குஃபு (Khufu ) காலத்தைய  கப்பல், கீசா பிரமிட் உள்ளே கண்டெடுக்கப்பட்டு, தற்போது எகிப்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 140 அடி அகலம்  அகலம் 29 அடி. 4500 வருடங்கள் பழமை கொண்ட இக்கப்பலின் வடிவமைப்பு வியக்கவைக்கும் ஒன்று. 

 

 

இந்தியத் துணை கண்டத்தின் வரலாற்றைப் பொறுத்த வரையில், பொ.யு.மு 2500 இல் சிந்து சமவெளி நாகரிகக் காலம் தொட்டு, உறுதி வாய்ந்த நாணல் கொண்டு கட்டப்பட்ட சிறு படகுகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக ஏரிகளிலும் ஆறுகளிலும்,  கடலிலும்   நாணல்களைக் கொண்டு, மரத்துண்டுகளைக் கொடு, மரப்பலகைகளை சேர்த்து அமைக்கப்பட்ட சிறு படகுகள் முதல் பெரும் கலங்கள்  வரை அமைக்கும் முறை  இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. தென்னிந்தியாவில் சமீப காலம்  வரை கேரளாவில் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி   மரத்தினால் பெரிய படகுகள் கட்டப்பட்டன. 

மாமல்லபுரம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நகரம்.  பல்லவர் காலத்தில் முதலாம் மகேந்திரவர்மன் தொடங்கி ராஜசிம்மன் காலம் வரை அமைக்கப்பட்ட குடைவரைகள், ஒரு கல் கோயில்கள், கட்டப்பட்ட கோயில்கள் இந்தியக் கலை மரபின் பொக்கிஷங்களாகும். மாமல்லையில் பல்லவர் காலத்தில் கலையுடன், வாணிகம் செழித்த வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. தொல்லியல் ஆய்வுகள் கடற்கரைக் கோயிலின் அருகே இருக்கக் கூடிய  தடயங்கள், படகுகள் வந்து நிறுத்தப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. 

மாமல்லபுரத்திலிருந்து சில கிலோமீட்டர்களில் பாலாற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள  வசவசமுத்திரம், சதுரங்கப்பட்டினம் பகுதி பல்லவர் காலத் துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  பாலாற்றின் முகத்துவாரப் பகுதியில் உள்ள இன்றைய வயலூர், பல்லவர், சோழர்  காலத்தில் பிலவாயிலூர் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. பிலவாயில், பிலாத்துவாரம்  என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படுபவை வேற்று உலகிற்குள் (Nether world ) செல்வதற்கான வழியைக் குறிப்பதாகும். 

பிலவாயிலூர் கோயில் கல்வெட்டில் பல்லவ அரச வம்சம் பட்டியலாக, 54 அரசர்களின் பெயர்கள்  கொடுக்கப்பட்டுள்ளது. இதே கோயிலில் காணப்படும் பல்லவ அரசன்  ராஜசிம்மனின்  கல்வெட்டு, பல்லவ கடற்படை குறித்த குறிப்புகளைத் தருகிறது. நரசிம்மவர்மனின் காலத்தில் பல்லவ கடற்படை இலங்கை சென்ற குறிப்புகளும் வரலாற்றில் காணப்படுகின்றன. இம்மன்னனின் காலத்தில் சீன தேசத்திற்கு தூதுவர் குழு சென்ற விவரங்களும், சீன யாத்திரிகர் யுவான் சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்தமை குறித்த தரவுகளும் கிடைக்கின்றன.  

தாய்லாந்து நாட்டில்தான் தென்கிழக்காசிய பகுதியில் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றுடன் பல்லவர் காசுகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையேயாயன தொடர்புகள் இவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. தக்கோலம் என்ற பெயரால் அழைக்கப்படும் Takau Pa (தாய்லாந்து) பகுதியில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு  மணிக்ராமம் என்ற வணிகக்குழு அங்கு அவனிநாரணம் என்ற நீர்நிலை அக்குழுவினரால் அமைக்கப்பட்டிருக்கிறது  என்று  பேசுகிறது. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ கிரந்த எழுத்தமைதியில், வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், மலேயா, ஜாவா மற்றும் சுமத்ரா பகுதிகளில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் தமிழ் வணிகர்களின் குழுக்களைக் குறிப்பிடுகிறது. 

தென்கிழக்காசிய நாடுகளுடனான தொடர்புகள் சோழர்கள் காலத்தில் வலுப்பெற்றது. குறிப்பாக 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழமண்டலக் கடற்கரையிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான முறை தமிழகக் காலங்கள் சென்று கொண்டிருந்தன.  தொடர்ச்சியாக வாணிகம் மேம்பாட்டு, பல வாணிகக் குழுக்கள் உருவாகி, அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலமாக நாம் சோழர்களின் காலத்தைக் கூறலாம். பதினெண்விஷயம் , நானாதேசி என்ற இரு சொற்கள் பல நூறு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. நானாதேசி என்ற குழு தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற குழுவாக இருக்கலாம் என்றும், பதினெண்விஷயம் ,18 நாடுகளில் இருந்து வந்த வணிகர்களைக் கொண்ட குழுவாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். இவை தவிர அஞ்சுவண்ணம் மற்றும் மணிக்ராமம் என்ற வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. 

பதினான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட  நன்னூல் என்ற இலக்கண நூல்,  இப்பதினெட்டு நாடுகளை பட்டியலிடுகிறது. சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், கோசலம் மற்றும் தமிழகம் என நன்னூல் பட்டியலிடுகிறது. இப்பட்டியலில், சில நாடுகள் கடல் கடந்து, குறிப்பாக வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. இலங்கையின், அனுராதபுரம் என்னும் நகரில் உள்ள கல்வெட்டு நான்குநாட்டார் என்னும் வணிகக்குழுவை குறிப்பிடுகிறது. 

தஞ்சை சோழர்கள்,தங்களின் கடற்படை கொண்டு, கடல் கடந்து தங்களின் மேலாதிக்கத்தை நிறுவினர். முதலாம் பராந்தக சோழன் காலம் முதற்கொண்டு, சோழர்களுக்கும், இலங்கைக்கும் இடையே பல போர்கள் நிகழ்ந்தன. இலங்கையின் மஹாவம்சம் சோழர்களின் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிறது. முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் இலங்கையின் மீது சோழர்கள் படையெடுத்து, இலங்கையை  சோழர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தனர். 

சோழர்களின் கடற்படை சோழமண்டலக் கடற்கரையிலிருந்து யாழ்ப்பாணக் கடற்கரை வரை கடற்கரையினை ஒட்டியவாறே சென்றிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. முதலாம் ராஜராஜனின் கடற்படை சேர மற்றும் பாண்டியர்களின் கூட்டு கடற்படையினை விழிஞம், காந்தளூர்சாலை  கடற்கரைப் பகுதிகளில் எதிர்கொண்டது குறித்து கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. 

ராஜராஜனின் கடைசி ஆட்சியாண்டுகளில் சோழர்படை பழந்தீவு (இன்றைய மாலத்தீவு) என்ற பகுதியினை வென்ற ஆதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய கோவாப் பகுதியையும் சோழர்களின் படை கைப்பற்றியதாகவும், அப்பகுதி சாந்திமத்தீவு என்ற பெயரால் அழைக்கப்பட்டதையும் வரலாற்றுக்கு குறிப்புகள் மூலம் நாம் அறிய முடிகிறது. பிற்கால ஆவணங்கள் இப்பகுதியை சிந்தபார் என்று குறிப்பிடுகின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் சோழர் கடற்படை மிக வலுவானதாக கட்டமைக்கப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகள் சோழப் பேரரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டன. தொடர்ச்சியான கடற்பயணங்கள் முதலாம் ராஜேந்திரனின் காலம் தொட்டு தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டன. ராஜேந்திர சோழனின் கடற்படை வெற்றிகள், குறிப்பாக கடார படையெடுப்பு , அம்மன்னனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டு 

 (பொ.யு.1025) முதல் கிடைக்கிறது. ஸ்ரீவிஜயம், மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபப்பாளம், முதலிய பகுதிகளை முதலாம் ராஜேந்திரனின் கடற்படை கைப்பற்றிய குறிப்புகள்  செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கிடைக்கின்றன. 

 பொ.யு.11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசுக்கும், சீன தேசத்திற்குமான வணிக, கலாச்சார தூதுவர்கள் கொண்ட குழுக்கள் சென்றது குறித்தும், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சீன-தமிழகத்து தொடர்புகள் குறித்து கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த  பானைத் துண்டுகள் அகழாய்வில்  கிடைத்துள்ளன. சமீப காலத்தில் தாராசுரத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த  சீன தேசத்து (குயிங்பை (Quingbai) வகை)  பானைத் துண்டுகள்  சோழர் காலத்து சீனத் தொடர்புக்கு சான்றாக அமைகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்து அகழாய்வில் சீன தேசத்தின் Jingdezhen பகுதியில் செய்யப்பட   பீங்கான் (Porcelain) துண்டுகள் கிடைத்துள்ளன.  

வரலாற்று சிறப்புமிக்க நாகை சூடாமணி விஹாரம்,  கடார மன்னன் ஸ்ரீ மாரவிஜயோத்துங்க வர்மனால் தன் தந்தையின் நினைவாக அமைக்கப்பட்டது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இந்த புத்த விஹாரம் கட்டி முடிக்கப்பட்டு, ஆனைமங்கலம் என்ற ஊர் இந்த புத்த விஹாரத்திற்காக தானமாக அளிக்கப்பட்டது.  சுமத்ரா தீவின் மேற்குபகுதியில் கண்டறியப்பட்ட பொ.யு 1088ஐச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு, அங்கு கணிசமான தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக உள்ளது. இக்கல்வெட்டு, ஐந்நூற்றுவர் என்ற வணிகக்குழு வேலபுரம் என்ற இடத்தில் கூடி, மரக்கல உரிமையாளர்கள் மற்றும் கலத்தின் கேவிகள் அளித்த கொடைகள் குறித்து பேசுகிறது. மேலும், அங்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருட்கள் குறித்தும் பேசுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

 

(தொடரும்)