வரலாறு விரிவாக வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ, வரலாற்றில் சிறிது ஆர்வம் கொண்டவர்கள் கூட சமீப காலங்களில் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒன்று , “மெய்க்கீர்த்தி”. அதிலும்  அதிக அளவில் அறிந்து வைத்திருப்பது , “திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள” என்று தொடங்கும் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி. 

 

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி

வேங்கை நாடும் கங்க பாடியும்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்

இரட்ட பாடி ஏழரை இலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்

திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்

எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்

தொழுதகை விளங்கும் யாண்டே

செழியரைத் தேசுகொள்  கோஇராச கேசரி

வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்”

 

என்ற  மெய்க்கீர்த்திதான் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. பிற சோழ மன்னர்களுக்கும்  பாண்டிய,  சேர அரசர்களுக்கும் மெய்க்கீர்த்திகள் உண்டு. ஆயினும், ராஜராஜ சோழனின் மேற்கூறிய மெய்க்கீர்த்தி அனைவரும் அறிந்த ஒன்று. 

இந்த மெய்க்கீர்த்தி என்றால் என்ன ? அதன் பயன்பாடு மற்றும் வரலாறு குறித்து ஒரு சிறிய/எளிய அறிமுகம் இக்கட்டுரை.  

அரசனின் புகழ் ஒரு கவிதையாக இந்த மெய்கீர்த்தியை கொள்ளலாம்.  அரசர்களை கடவுளர்களுக்கு இணையாக தனது நாட்டையும் மக்களையும் காக்க  வந்த கடவுளாகவே உருவகப்படுத்தி பல பாடல்களை நாம் வரலாற்றின் வழி நெடுகிலும் காண முடிகிறது. சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் அரசர்களின் வீரத்தையும், புகழையும் பாடுபவை. பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் முழுமையாக மன்னர்கள் புகழ்பாடுபவையே.  ஆயினும், அறிஞர்கள் அவற்றை மெய்க்கீர்த்திகளாக கொள்வதில்லை. எனின், மெய்க்கீர்த்தி என்பதன் வரையறை என்ன? 

மெய்க்கீர்த்தியை வரையறுக்கும் நூல்களுள் பன்னிரு பாட்டியல் மிக முதன்மையானதாக கருதப்படுகிறது. பொ.யு. 9 அல்லது  10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்நூல் மெய்க்கீர்த்தியை 

” சீர் நான்காகி இரண்டடித் தொடையாய்

  வேந்தன் மெய்ப்புகழ் எல்லாஞ் சொல்லியும் 

  அந்தத் தவன் வரலாறு சொல்லியும் 

  அவளுடன் வாழ்கெனச்   சொல்லியு மற்றவன் 

  இயற்பெர்ப் பின்னர் சிறக்க யாண்டெனத் 

   திறப்பட வுரைப்பது சீர்மெய்க்கீர்த்தி” என்று வரையறுக்கிறது. 

 

வெண்பாப் பாட்டியல் என்னும் நூல் 

” தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீர் அடியால் 

  எழிலரசர் செய்தி இசைப்பர்” என்று மெய்க்கீர்த்திக்கு இலக்கணம் வகுக்கிறது. 

 நவநீதப் பாட்டியல், 

“சிறந்த மெய்க்கீர்த்தி அரசர்செயல் கொற்றவாம் 

அச்செய்யுள் அறைந்திடும் சொற்சீர் அடியாம்” என்று கூறுகிறது. 

Cholas, History, Tamilnadu, Inscriptions, Epigraphy, Tamil History

19 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இரு இலக்கண நூல்களான  பிரபந்த தீபிகை மற்றும் முத்துவீரியம் போன்றவையும் மெய்க்கீர்த்திக்கு இலக்கணம் கூறுகின்றன. 

 ” சொற்சீர் அடியால் தொழிற்படு கீர்த்தியைப் 

    பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை” 

                                                                -பிரபந்த தீபிகை 

” சொற்சீர் அடியெனும் கட்டுரைத் தொடர்பாற் 

 குலமுறை யாற்றிய கீர்த்தியைக் கூறல் 

மெய்க்கீர்த்தி மாலையாம் விளம்புங் காலே” 

                                                            -முத்து வீரியம்

ஆக, மன்னனின் போர் வெற்றிகள், முன்னோர் திறம், வரலாறு ஆகியவற்றைக் குறிப்பிடுவன இந்த மெய்க்கீர்த்திகள் என்று மேற்கூறிய நூல்களால் அறியலாம்.

சேர மன்னர்கள்புகழ் பாடும் பதிகங்கள் கொண்ட பதிற்றுப்பத்து என்னும் நூலே, பிற்கால மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடி என்று அறிஞர் திரு.சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மெய்க்கீர்த்தியை அறிமுகப்படுத்தியதே முதலாம் ராஜராஜ சோழன்தான் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், ராஜராஜனின் காலத்திற்கு முன்பே மெய்க்கீர்த்திகள் கல்வெட்டில் கிடைக்கின்றன. கல்வெட்டுக்களைத் தவிர செப்பேடுகளிலும் மன்னர்கள் புகழ் பாடும் வரிகள் உண்டு. மன்னர்களின் முன்னோர்களின் பெயர்களும் அவர்களின் பெருமைகளும் செப்பேடுகளில் காணப்படுகின்றன. இவை, பெரும்பாலும் வடமொழியில் அமைந்திருக்கும். மன்னனின் தானம் குறித்த ஆணை  மற்றும் நில விவரங்கள் மட்டுமே தமிழில் அமைந்திருக்கும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரையில், நமக்கு கிடைத்திருக்கக்கூடிய செப்பேடுகளில் பல்லவர்  மற்றும் பாண்டியர்களுடையவையே காலத்தால் முற்பட்டவை. பல்லவர்களின் பள்ளன்கோயில் செப்பேடுதான் தமிழ் மொழியைக் கொண்ட, தமிழகத்தில் கிடைத்துள்ள செப்பேடுகளில் பழமையானதாகும். இது சிம்மவர்மன் (பொ.யு. ஆறாம் நூற்றாண்டு) காலத்தையதாகும். பாண்டியர்களுடைய செப்பேடுகளில் காலத்தால் பழமையானது பராந்தக நெடுஞ்சடையனுடைய (பொ.யு.8 ஆம் நூற்றாண்டு) வேள்விக்குடி செப்பேடாகும். இந்த செப்பேடுகள் குறித்து விரிவாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். 

வரலாற்று ரீதியாக கல்வெட்டுக்களில் காணப்படும்   மெய்க்கீர்த்திகளில் முன்னோடியாக கருதப்படுவது, ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் சனிக்கவாடி (திருவண்ணாமலை) கல்வெட்டாகும். தமிழக மாமன்னர்கள் கல்வெட்டுக்கள் நூற்றுக்கணக்கில் ( மூன்றாம் கிருஷ்ணன் காலத்திற்கு முன்பு) இருக்க, இந்த மெய்க்கீர்த்தியை முதன்மையானதாக கருத காரணம், நாம் மேற்கூறிய நூல்கள் வரையறுக்கும் இலக்கணப்படி, குறிப்பாக பன்னிருபாட்டியல் குறிப்பிடும் இலக்கணத்தின்படி அமைந்திருக்கும் மெய்க்கீர்த்தி சனிக்கவாடி கல்வெட்டாகும். 

செந்தலையில் (தஞ்சாவூர்)  உள்ள  முத்தரையர் சுவரன் மாறன் புகழ் பாடும்  கல்வெட்டு மெய்க்கீர்த்தி என்று கருதப்பட்டாலும், மேற்கூறிய இலக்கணப்படி அமையவில்லை என்பதால், சனிக்கவாடி கல்வெட்டே முதன்முதலாக மெய்க்கீர்த்தி கொண்ட கல்வெட்டாக கருதப்படுகிறது. இக்கல்வெட்டின் காலம் பொ.யு 10 ஆம் நூற்றாண்டாகும். கல்வெட்டின் பல வரிகள் சிதைந்திருந்தாலும், ஓரளவிற்கு வாசிக்கும் நிலையில் இருக்கிறது. 

“ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் முயங்கச் சீர்மகள் விளங்கப் 

பொருகடல் உடுத்த பூதலமுழு வதும் செங்கோல்   

……………………………………………………………..கஜமல்லன்னான 

சீரகால …. ……………………………………………………

ராஜாதிராஜன் பரமேஸ்வரன் தராதலம் புகழும் சலகநலாதன்  

காண்டகு தஞ்சையும் கச்சியுங் கொண்டங்காண்ட யாண்டிரு 

பத்திஞ்சினுள் ” என்று அக்கல்வெட்டு தொடர்கிறது. 

இதன் பின்னர் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் மெய்க்கீர்த்தி முழு வடிவம் பெற்றது என்றே கூறலாம். கல்வெட்டுகளில் கானப்படும் மெய்க்கீர்த்தியில் என்னென்ன காணப்படும்  என்பதனை சுருக்கமாக இவ்வாறு வகுத்துக் கொள்ளலாம் 

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் 
  2. அரசர் வரலாறு 
  3. வீரச் செயல்கள், போர்கள் 
  4. பண்பு குணநலன்கள் 
  5. புகழ், பெருமை 
  6. கல்வெட்டு எழுதப்படும்  ஆட்சியாண்டு.முதலாம் ராஜராஜ சோழனைத் தொடர்ந்து வந்த சோழ அரசர்களும். பாண்டிய அரசர்களும், பிற்காலத்திய விஜயநகர, நாயக்க அரசர்களும்  மெய்க்கீர்த்திகளுடன் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்தனர்.

 

அடிக்குறிப்புகள் 

சோழர் வரலாறு – மா. ராசமாணிக்கனார் 

சோழர்  செப்பேடுகள் – புலவர் வே. மகாதேவன் 

பன்னிரு பாட்டியல் வினா விடை – திரு. வெள்ளைவாரணன் 

கலித்துறை பாட்டியல் எனப்படும் நவநீதப்பாட்டியல் -நவநீத நடனார் 

வெண்பாப் பாட்டியல் 

பிரபந்த தீபிகை – வேம்பத்தூர் வேங்கட சுப்பைய நாவலர் 

முத்துவீரியம் – உறையூர் வித்வான் முத்துவீர உபாத்தியாயர்  

Epigraphia Indica -VOL  40 – திரு.கே.சி. கிருஷ்ணன்