பொன்னியின் செல்வன் வாசிப்பின் மூலம், வரலாற்று ஆர்வலனாகி, சோழர், பல்லவர் கால கலை மரபுகள், கோயிற்கட்டிடக்கலை, சிற்பவியல், ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என்று தேடித் தேடி வாசித்து, ஒரு பெரும் அறிஞர்கள் நிரையை அறிந்து கொண்டு, நண்பர்களுடன் வந்தியத்தேவன் யாத்திரை, பல்லவர் குடைவரைகள், சோழ தேசப் பயணங்கள் என்று உற்சாகப் பாய்ச்சலாக இருந்த காலகட்டம் 2008-2012. முறையாக கல்வெட்டுக்கள் வாசிக்க பயிற்சி வகுப்புகள் சென்று, சான்றிதழும்,வரலாறு, தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும்  பெற முடிந்தது ஒரு சிறந்த தருணம். குடவாயில் பாலசுப்ரமணியன், முதுமுனைவர் நாகசாமி, S ராமச்சந்திரன், சித்ரா மாதவன், ரா.கலைக்கோவன் போன்ற அறிஞர்களுடன் உடன் அமர்ந்து உரையாடி, விவாதித்து, கற்ற நாட்கள் அவை.   

இதனிடையே ஜெயமோகன் என்னும் மாபெரும் இலக்கிய ஆளுமை  அறிமுகம் இணையம் வாயிலாக. ஜெ என்னைப்  பொறுத்தவரையில் ஒரு பண்பாட்டு இயக்கம். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழிலக்கியம் மட்டுமின்றி, சங்க இலக்கியம் தொடங்கி, கலை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, இசை, அரசியல், புராணம், இதிகாசம், நாட்டாரியல், குறிப்பாக கேரள சமூக, பண்பாட்டு வரலாறு என்று அவர் எழுதியவை ஏராளம். அவரிடம் உடன்படலாம், முரண்படலாம். ஆனால், தவிர்க்க முடியாது. ஜெயமோகன் வாயிலாக ஆறிமுகமான எழுத்தாளர்கள் பலரையும் வாசிக்கத் தொடங்கி, ஜோ டி க்ரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகையும் வாசித்திருந்த காலம். 

2013 ஆம் வருடம், சென்னையில் நடந்த ஒரு விழாவில் ஜோ டி க்ரூஸ் அவர்களை சந்தித்து சில நிமிடங்கள் உரையாட வாய்த்தது. தென்னிந்திய வரலாறு, கோயிற்கட்டிடக்கலை ,கல்வெட்டுக்கள், சிற்பங்கள், இசை, நடனம் பற்றிய என் தேடலையும், வாசிப்பையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். நல்லது தம்பி! என்று  அவர் சென்றிருந்தால் இன்னுமொரு பெரும் அறிவுலகிற்குள் நான் சென்றிருப்பேனா என்று தெரியாது. 

என் நல்லூழ், அவர் என்னிடம் Lionel Casson குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றார். நான் இல்லை என்றேன்.    பேராசிரியர் ராதா குமுத்  முகர்ஜி ? என்றார்.நான் ஆம், அவரின் வரலாற்றுப் புத்தகங்களின்  சில பகுதிகளை வாசித்திருக்கிறேன் என்றேன். சோழர் வரலாறு தங்களுக்கு விருப்பமான ஒன்று என்கிறீர்கள், தமிழர் கடற் பயணங்கள் குறித்து என்ன வாசித்திருக்கிறீர்கள் என்றார். நாவாய் சாத்திரம்,  கப்பல் சாத்திரம் என்ற நூல்களின் பெயர்களை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றேன். பேராசிரியர் அருணாச்சலம் அவர்களின் ஆய்வுகள் குறித்து தெரியுமா என்று கேட்டார். நான், இல்லை என்றேன். 

 

ஒரு புன்முறுவலுடன், நீங்கள் வாசிக்க வேண்டும் என்று சொல்லி, அவர் ஒரு மிகச்சிறந்த ஆய்வாளர், கல்வியாளர். இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் சென்று,கள ஆய்வுகள் நிகழ்த்தி, நெய்தல் நில மக்களின் அறிவுச் செல்வத்தை தொகுத்தவர். அவர்களின் மரபுசார்ந்த கடல், வானியல், கலங்கள் உருவாக்கும் முறைகள் குறித்தும், ஆங்காங்கு அபூர்வமாக கிடைத்த, வட்டார மொழிகளிலும்,  சொல் வழக்குகளிலும் எழுதப்பட்ட   ஆவணங்களையும் தொகுத்து ஒரு மாபெரும் பணியைச்  செய்தவர். அவர் குறித்து தமிழில் மிகக் குறைவாகத்தான் தெரியும். அதுவும், கடல்சார் ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உங்களைப் போன்று கலை, கலாச்சார பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபடுவர்களும் அவரைப்பற்றி அறிந்து  கொள்ள  வேண்டும்.  அவர் குறித்து பொதுவெளியில் எழுதவும் வேண்டும். அவரின் ஆய்வுப்பங்களிப்பு இல்லாமல் நாம் சோழர்களின் கடற் பயணங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அவரின் ஆய்வு நூல்களை வாசியுங்கள் என்றார். 

பண்டைய இந்தியாவில் கலங்கள் கட்டப்பட்ட முறைகள், இந்தியர்களின் கடற் பயணங்கள் குறித்து ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க ராதா குமுத் முகர்ஜி எழுதிய நூலிலிருந்து  தொடங்குங்கள் என்று கூறி, Lionel Casson என்ற அமெரிக்க ஆய்வாளரையும் வாசிக்கும்படி அறிவுறுத்தினார். அவருடன் கிடைத்த சில நிமிடங்களில் பல முக்கிய ஆய்வாளர்களையும், அறிஞர்களையும் குறிப்பிட்டு, கடல்சார் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். அவர் சென்ற பிறகுதான் எனக்கு உறைத்தது அவரிடம் ஆழி சூழ் உலகு குறித்து சில வார்த்தைகள் கூட பேசவில்லை என்று. என் வரலாற்றுத் தேடலின் மிக முக்கியத் தருணம் அந்த நாள் என்பதை நான் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பணிபுரியத் தொடங்கிய போது உணர்ந்தேன். சோழர் காலக் கலங்கள் (கப்பல்) குறித்து உரையாடல்கள் நிகழ்ந்தபோது பேராசிரியர் அருணாச்சலம் அவர்களின் ஆய்வு நூல்களே துணைபுரிந்தன. வராலாற்று ஆய்வுகளில் மிக முக்கியமான  பகுதியை நாம் வாசிக்காமலேயே இருந்திக்கிறோம் என்பதை அவர் நூல்கள் உணர்த்தின.

Prof.B.Arunachalam

Prof.B.Arunachalam

 முனைவர் பா.அருணாசலம்  நிலவியல் பேராசிரியர். நிலப்பரப்பியல் மற்றும் நிலப்படவரைவியல் துறையில் தன்முனைப்போடு  பல ஆய்வுகளை மேற்கொண்டு, முக்கியமான பங்களிப்பைத் தந்தவர். தன் சொந்த ஆர்வத்தாலும், ஈடுபட்டாலும் இந்திய வரலாற்றின் மிக இன்றியமையாத துறையான கடல் சார் வரலாற்றில் மிகப்பெரிய பங்களிப்பை நிகழ்த்தியவர். பண்டைய இந்தியர்களின் கடல் சார்  அறிதல்கள். கப்பல்கள் கட்டப்பட்ட முறைகள்,  கடற்பயணங்கள், வானியல் சார்ந்து கடலில் கலங்கள் செலுத்தப்பட்ட முறைகள்  குறித்து பல புத்தகங்களை எழுதியவர். இந்தியாவின் மாபெரும் சொத்தான பண்டையகால வரைபடங்களைத் தொகுத்து ஒரு மிகச் சிறந்த ஆவணக் காப்பகத்தையும், நூலகத்தையும் உருவாக்கியவர். இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் அனைத்திலும்  பயணித்து, நெய்தல் நிலப்பரப்பில் விரிவான கள ஆய்வு செய்தவர். பண்டைய துறைமுக நகரங்கள் என்று கண்டறியப்பட்ட அனைத்தையும் மீளாய்வு செய்து, முழுமையாக ஆவணப்படுத்தியவர். 

1933 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து, கடலூரில் பள்ளிக் கல்வியையும்  சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியலில் முதுகலை பட்டமும் பெற்றார். புகழ் பெற்ற புவியியலாளரும் , மும்பை ரூபேரல் கல்லூரியின் முதல்வருமான C B Joshi கேட்டுக்கொண்டதின்பேரில்,  பேராசிரியர் திரு.நாரணன்,அருணாசலத்தை பம்பாயில் பணியாற்ற அனுப்பினார்,  

C B ஜோஷிக்கு ஆய்வில் உதவியாளராகவும், இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கி 1960களில் மும்பையின் பார்லே (தற்போது சதயே) கல்லூரியில் 1960 முதல் விரிவுரையாளராகவும், பின்னர் பேராசிரியராகவும், 1970 ல்  துறைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டு  கல்லூரியின் புவியியல் துறையை மிகச் சிறந்த முறையில் கட்டமைத்து பல மாணவர்களை துறை நிபுணர்களாக்கினார்.1980 களின் தொடக்கத்தில், கடல்சார் வரலாற்றின் மீதிருந்த ஆர்வத்தால், இந்திய அறிவியல் மற்றும் தொழில்சார் ஆய்வு நிறுவனத்திற்காக தன்னுடைய ஆய்வுப்பயணங்களைத் தொடங்கினார். 

லட்சத்தீவுப் பகுதியை ஒட்டி இவர் நடத்திய முதல் ஆய்வு , இந்தியாவின் கடல்சார் வரலாற்றாய்வுகளில் ஒரு முக்கிய அத்தியாயமாக கருதப்படுகிறது.  இந்த ஆய்வைத்த தொடர்ந்து கடல்சார் வரலாற்று நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக நியமியக்கப்பட்டார். இந்தியாவின் கடல்சார் வரலாற்றை முழுமணியாக ஆவணப்படுத்தும் நோக்கில்   கட்ச் பகுதியில் தொடங்கி,  இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும், லட்சத்தீவுகள் முதல் கிழக்கே அந்தமான் தீவுகள் உட்பட மேற்கு வங்கம் வரையில் பல வருடங்கள் ஆய்வுகள் நிகழ்த்தி, முக்கிய ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்தார். 

பண்டைய இந்தியாவின் கலங்கள் மற்றும்   கடற்பயணங்கள் குறித்து ஒரு விரிவான  ஆய்வை எழுதிய முன்னோடி என்று  பேராசிரியர் ராதா குமுத் முகர்ஜியை குறிப்பிடலாம். வேத இலக்கியம் தொடங்கி, புராண இதிகாசங்கள், பௌத்த புராணங்கள், வெளிநாட்டார் பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகளான நாணயங்கள், கல்வெட்டுக்கள் என்று பல தரவுகளையும் திரட்டி ஒரு சிறந்த அறிமுகத்தை அளித்த அவருடைய ஆய்வு 1910 ஆம் ஆண்டு வெளியானது. 

 AL Basham, GR Tibbetts போன்ற அறிஞர்கள் இந்தியர்களின் கடற்வழிப் பயணங்கள் குறித்தும், வெளிநாட்டவர்களின் இந்திய பயணங்கள் குறித்தும் கட்டுரைகளும் நூல்களும் எழுதி இருந்தாலும்,  தன்னுடைய பல்லாண்டு கால கள  ஆய்வுகளின் மூலம், இந்தியர்களின் கடற்பயணங்கள் குறித்தும், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக் கூடிய கடல் சார்ந்த அறிதல்களையும் புரிதல்களையும் ஓட்டு மொத்தமாக தொகுத்தும் ஒரு மிகச் சிறந்த வரலாற்றுச் சித்திரத்தை  முழுமையான அளவில் அளித்தவர் என்று நாம் பேராசிரியர் அருணாசலம் அவர்களையே சொல்ல முடியும். 

தமிழக வரலாற்றில் சங்க காலம் தொட்டே  கப்பல்கள் செலுத்திய மன்னர்கள் குறித்தும், புகார்,முசிறி, கொற்கை முதலிய துறைமுகங்கள் குறித்தும் விரிவான குறிப்புகள் உண்டு.  இது குறித்து தனியே ஒரு கட்டுரைத் தொடரும் இதே தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

காஞ்சிப் பல்லவர்கள் 7 ஆம் நூற்றாண்டில் கலங்கள் செலுத்தியது குறித்தும், அவர்களின் கப்பல் கட்டுமான முறைகள் குறித்தும் விரிவாக அருணாச்சலம் அவர்கள் எழுதி உள்ளார். பொ.யு .11 ஆம் நூற்ற்றாண்டில் போஜ மன்னனால் எழுதப்பட்டதாக கருதப்படும்  “யுக்திகல்பதரு” என்ற நூலில் கப்பல்கள் குறித்து பல நுட்பமான விவரங்கள் காணப்படுகின்றன. இவற்றைத் தன்னுடைய ஆய்வுகளில் ஆங்காங்கு குறிப்பிட்டு  பண்டைய கப்பல் கட்டுமான முறைகளை விளக்கும்பொழுது, இந்நூலில் காணப்படுகின்ற தகவல்களைக் கொண்டு, பல ஊகங்களை முன்வைக்கிறார். 

 

தஞ்சை  சோழர்கள் காலத்தில் குறிப்பாக ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திய கடற்பயணங்கள் குறித்தும்,சோழர்கள் காலங்கள் செலுத்திய விதங்கள், கட்டுமான முறைகள், தென்கிழக்காசிய நாடுகள் மீதான அவர்களின் படையெடுப்புகள், சோழ நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் அவர்களுக்கு சாதகமாக இருந்த கிழக்குத்திசை நோக்கிய காற்று, அவர்கள் பயணித்த மாதங்கள் (ஜனவரி,பிப்ரவரி), அவர்களுடைய கலங்கள் சென்ற வழிகள் என்று  ஒரு மிக விரிவான நூலை (Chozha Navigational Package) எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகம்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பணியாற்றிய போது எனக்கு  மிக முக்கியமான நூலாக இருந்துது 

 பேராசிரியர்  அருணாசலம் அவர்களின் பங்களிப்பை கீழ்க்கண்டவாறு  தொகுத்துக் கொள்ளலாம் 

  1. 2500 வருட இந்திய கடல்சார் வரலாற்றை தன பல வருட கள ஆய்வுகள் மூலமும், வெகு அபூர்வமாகவே கிடைத்த ஆவணங்கள் மற்றும் நெய்தல் நிலத்து மக்களுடன் தொடர்ச்சியாக நடத்திய உடையாடல்கள் வாயிலாகவும் , அவர்களிடையே மட்டுமே புழங்கிய கடல் சார் அறிதல்களையும் ஆவணப்படுத்தியது. 
  2. பண்டைய இந்தியாவில் சிறு படகுகள் முதல் பெரும் கலங்கள் வரை, அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டன , கட்டப்பட்டன என்பதை ஒரு தனி ஆராய்ச்சி நூலாக Boat and ship designing in India  என்ற தலைப்பில் வெளியிட்டது. 
  3. அரேபிய மற்றும் மற்ற வெளிநாட்டார் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் இருந்து 13 ஆம் நூற்றாண்டில் இந்திய கடலோடிகள் கலங்கள் செலுத்திய விதம், குறிப்பாக விண்மீன் அட்டவணைகள், கடற்பயணங்களில்  நாள் மற்றும் நேரம் அறிதல் குறித்த முறைகள் ஆகியவற்றை தொகுத்தது. 
  4. கடல்சார் வரலாற்றாய்வு நிறுவனம், (மும்பை) தொடங்கப்பட்டதிலும்,அந்நிறுவனத்தின் மூலம் பல ஆராய்ச்சியாளர்களையும், ஆய்வு நூல்களையும் உருவாக்கியது . இவருடைய பல நூல்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 
  5. ஆண்டுதோறும் கடல்சார்  வரலாற்று நிறுவனம்  மூலம், கருத்தரங்கங்களையும், ஆய்வுரைகளையும் ஒருங்கிணைத்து பல ஆய்வுகளை வெளிக்கொணர்ந்தது. 
  6. இவை தவிர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பண்டைய துறைமுகங்கள் குறித்த தனித்தனியாக விரிவான ஆய்வு நூல்களைப் பதிப்பித்து. 

மேற்கூறியவை அனைத்துமே  பல ஆண்டு உழைப்பைக் கோருபவை . ஆசிரியப் பணியில் இருந்து கொண்டே, நீண்ட நெடும் பயணங்கள், ஆய்வுகள் என்று தன வாழ்நாள் முழுவதும் அவர் ஆற்றிய பணிகள் இந்திய வரலாற்றிற்கு முக்கியமானவை. பல கடல்சார் வரலாற்று  நிறுவனங்களும், கல்வி நிலையங்களும், இந்திய தேசிய வரைபட சங்கம் முதலிய நிறுவனங்களும் அருணாச்சலம் அவர்களுடைய முன்னெடுப்பாலும் பல முக்கிய பணிகளை ஆற்றி இருக்கின்றன.  

மிகுந்த நகைச்ச்சுவை உணர்வு கொண்டவராகவும், மாணவர்களிடம் கனிவு கொண்டவராகவும் அறியப்படுகின்ற அருணாசலம்  அவர்கள், நவீன தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இன்றி, 11 ஆம் நூற்றாண்டில்  சோழர்கள் எவ்வாறு நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து தென் கிழக்காசிய நாடுகளுக்கு சென்றனரோ, அதே முறையில், எந்த நவீனக் கருவிகளும் இல்லாத ஒரு கப்பலில், வின்மீன்களுடைய இருப்பு நிலையை மட்டும் துணையாகக் கொண்டு  ஒரு ஆய்வுக் குழுவினருடன் செல்ல திட்டமிட்டார். இந்தியக் கடற்படையின் INS Tarangini என்ற சிறு கப்பல் அவருடைய ஆய்வுக்காக அரசின் அனுமதியுடன் அளிக்கப்பட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பயணத்திலிருந்து விலக வேண்டிய சூழலுக்கு ஆளானார். ஆயினும், ஆய்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்களோடு தொடங்கிய அந்த பயணம், மோசமான வானிலை காரணமாக பாதி வழியில் கைவிடப்பட்டது.
பொன்னியின் செல்வன்  வாசித்துவிட்டு , ‘வந்தியத்தேவன் யாத்திரை’ என்று பயணத்திற்கு பெயரிட்டு  காஞ்சி முதல் கோடியக்கரை வரை நண்பர்களுடன் பயணம் செய்த எனக்கு, பேராசிரியர் அருணாசலம்  அவர்களின் கடற்பயணத் திட்டம் அவரை ஒரு சாகசப்பிரியராக எண்ணச் செய்தது. என்றாவது ஒருநாள் அவருடைய கனவான அந்தக் கப்பல் பயணத்தை நாம் நிகழ்த்த முயலலாம் என்றும் எண்ணியதுண்டு.
பேராசிரியர் அருணாசலம்  குறித்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு அப்பால்  பொதுவெளியில் அதிகம் எழுதப்படவில்லை. கோயில்கள், சிற்பங்கள், சோழர்கால கலை, வரலாறு, பண்பாடு, அரசியல் என்று வருடம் முழுவதும்   சென்னையில் பலரால் நிகழ்த்தப்படும் உரைகளில் கூட அவர் பெயர் ஒலித்ததில்லை. இந்த ஒரு   சிறு கட்டுரை ஒரு தொடக்கமாக இருக்கட்டும். அவருடைய  நூல்கள் குறித்து இன்னும் விரிவாக எழுத வேண்டும். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.